கார்ல் மார்க்ஸ் - பொதுவுடமையின் தந்தை - கம்யூனிஸ்டுகளின் கடவுள்... ஒரு அறிமுகம்...
கார்ல் மார்க்ஸ் - பொதுவுடமையின் தந்தை - கம்யூனிஸ்டுகளின் கடவுள்... ஒரு அறிமுகம்...
வார விடுமுறையை அனுபவிக்க விரும்புவீர்களா? சாலைகளில் வண்டி ஓட்டுவதையும் பொது நூலகங்களை பயன்படுத்துவதையும் விரும்புவீர்களா?
அநீதி, ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர விரும்புபவர்களில் நீங்களும் ஒருவரா?
இப்போது நீங்கள் நாளொன்றுக்கு 24 மணி நேரம் வேலைசெய்ய வேண்டியதில்லை, வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டியதில்லை என்ற மகிழ்ச்சியை அனுபவிக்கிறீர்களா?
மதிய உணவு இடைவேளை வேண்டுமா? வயதானதும் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற விரும்புகிறீர்களா?
அப்படியானால், கார்ல் மார்க்ஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க நீங்கள் விரும்புவீர்கள். ஏனெனில் இந்த மாற்றங்களை அவர் கொண்டு வந்தார்.
உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் எப்போதும் காரல்மார்க்ஸ்க்கு ஒரு முக்கிய இடமுண்டு.
காரல் மார்க்ஸ் அவர்களுக்கு 201 ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ஒரு மாமனிதன் நூற்றாண்டு கடந்து மக்களின் மனங்களின் வாழ்கின்றன என்றால் அவர்தான் காரல் மார்க்ஸ்...
இளமைப்பருவம் :
கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் 05 தேதியில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.
நட்பும் காதலும் :
1841-இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிஸ் சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.
பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்ஸ், ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.
தன் காதல் கணவன் மாபெரும் சிந்தனையாளன் என்பதைப் புரிந்துகொண்டு, எல்லாவிதத் துயரங்களையும் ஏற்றுக்கொண்ட ஜென்னி மார்க்ஸ், உலகின் அற்புதமான காதலிகளின் வரலாற்றில் நிரந்தரமாக நினைவுகூரப்படுவார்,
மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் நட்பும் வரலாற்றில் போற்றுதலுக்குரியது . இவர்கள் இருவரும் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.
ஏங்கெல்ஸும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். மார்க்ஸின் சிந்தனைகளும் நூல்களும் வெளிவருவதற்குப் பொருளாதார அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் ஏங்கெல்ஸே.
" மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரின் 1848ன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து அம்சங்களில் ஒன்று, அனைத்து குழந்தைகளுக்கும் பொதுப்பள்ளிகளில் இலவசக் கல்வி, தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பது என்பதாகும்."
தத்துவங்களும் & புத்தகங்களும் :
மார்க்ஸ் பல நாடுகளில் இருந்து துரத்தப்பட்டார். வாடகை கொடுக்க முடியாமல் பல வீடுகளில் இருந்தும் துரத்தப்பட்டார், ஆனாலும் அவர் தன் சிந்தனைகளையோ செயல்பாடுகளையோ நிறுத்திக்கொள்ளவில்லை. மார்க்சின் சிந்தனையால் இந்த மனித குலத்துக்குக் கிடைத்த நிகரற்ற அறிவுக் களஞ்சியம் ‘மூலதனம்’(டாஸ் கேப்பிட்டல்). என்ற நூலை எழுதினார்.
‘’எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன. நமது வேலை உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திப்பதில்லை, மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே!” என்றார். அதற்கு என்ன செய்வது? “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை மார்க்ஸ் எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.
"அவரது முழக்கமான 'உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்பது ஆயுதம் தூக்க விடுத்த அழைப்பு. நாம் மேம்படுத்துவதற்காக போராடவேண்டும் என்ற பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதே மார்க்சின் உண்மையான கொடையாக இருந்தது. அது மார்க்சிஸ்ட் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தது.
உங்கள் சமுதாயத்தில் ஏதேனும் தவறு இருந்தது என்றால், நீங்கள் ஏதேனும் அநீதி, அநியாயம் அல்லது சமத்துவம் இல்லாதிருப்பதை உணர்ந்தால், நீங்கள் பிரச்சனை எழுப்பி, மக்களை திரட்டி நீங்கள் போராடி மாற்றத்திற்காக பாடுபடவேண்டும்.
காரல் மார்க்ஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இவர் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார்.
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்ஸ் மறைந்து இரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 130 கோடிக்கு மேலாகும் .
மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார். ஏனெனில் அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதன்.
காரல் மார்க்ஸ் அவர்களுக்கு 201 ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...ஒரு மாமனிதன் நூற்றாண்டு கடந்து மக்களின் மனங்களின் வாழ்கின்றார் என்றால் அவர்தான் காரல் மார்க்ஸ்...
காரல் மார்க்ஸ் அவர்களைப்பற்றி மேலும் அறிய
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எழுத்தாளர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரை.. காண இந்த லிங்கில் தொடரவும்
https://www.youtube.com/watch?v=mhqRn7HKpZs
நன்றி...
No comments